திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

திண்டுக்கல் அருகே இன்று மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

செம்பட்டி:

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 60). இவரது மனைவி பஞ்சவர்ணம் (56). இருவரும் இன்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில், வத்தலக்குண்டுவில் இருந்து, செம்பட்டி வழியாக, திருப்பூரில் உள்ள தனது மகன் ஜோதிபாசுவை பார்ப்பதற்காக சென்றனர். செம்பட்டி அருகே புல்வெட்டி குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது, பின்னால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவர்கள்மீது ஏறியதில் இருவருக்கும் தலை, முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து தம்பதியின் உடல்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அப்போது, வேடிக்கை பார்த்தவர்களை அவர்கள் உடலை தூக்குவதற்கு போலீசார் அழைத்தனர். ஆனால், யாருமே முன்வராத காரணத்தால் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களின் உடல்களை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். மனிதநேயமிக்க போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்கள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர். இன்று அதிகாலையில் செம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com