குமரி மாவட்டத்தில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்ய தயக்கம்

குளச்சல் நகராட்சியிலும் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளரான ஜான்சன் சார்லசுக்கு எதிராக நசீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே குளச்சல் நகராட்சியின் தலைவராக இருந்தவர்.
திமுக
திமுக
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் புதிதாக உருவான கொல்லங்கோடு நகராட்சிகள் உள்ளன.

4 நகராட்சிகளிலும் தி.மு.க. கூட்டணியே அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 4 நகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணியே கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து தி.மு.க.வின் தலைமை இந்த நகராட்சிகளில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி குழித்துறை நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் மெர்லின் ஷீபா அறிவிக்கப்பட்டார்.

ஆனால் நேற்று நடந்த தேர்தலில் மெர்லின் ஷீபாவை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளர் பொன். ஆசைதம்பி திடீரென களம் இறங்கினார். அவர் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றியும் பெற்றார்.

இதுபோல குளச்சல் நகராட்சியிலும் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளரான ஜான்சன் சார்லசுக்கு எதிராக நசீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே குளச்சல் நகராட்சியின் தலைவராக இருந்தவர்.

புதிதாக உருவான கொல்லங்கோடு நகராட்சி தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ராணி களம் இறங்கி தலைவர் பதவியை கைப்பற்றினார்.

இதற்கிடையே தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி தலைவரும், முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்த உத்தரவு வெளியானதும் போட்டி வேட்பாளராக களம் இறங்கி பதவியை பிடித்தவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவர்களில் யாரும் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை.

கடும் போட்டிக்கு இடையே பதவியை கைப்பற்றி உள்ளோம். அதனை எப்படி ராஜினாமா? செய்வது என அனைவரும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டுவோர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com