

தூத்துக்குடி:
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் இன்பென்ட் ராஜா(வயது 25). எஸ்.எம்.புரத்தை சேர்ந்தவர் மணிராஜ்(25). இவர்கள் 2 பேரும் ஒரு கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் இன்பென்ட் ராஜ் காரில் எஸ்.எம்.புரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காரில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 2 பேரிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் இன்பென்ட் ராஜின் கையில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மணிராஜ் வீட்டுமுன்பு 2 பேரும் நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களும் வந்தனர். அவர்கள் இன்பென்ட் ராஜ் காரில் 2 பேரையும் கடத்தி சென்றனர்.
அப்போது காரின் கதவை திறந்து இன்பென்ட்ராஜ் கீழே குதித்து தப்பித்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்கிடையே மணிராஜை காருடன் மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் முன்பு விட்டுவிட்டு வாலிபர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக இன்பென்ட்ராஜ் செல்போன் மூலம் தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் எஸ்.எம்.புரத்தை சேர்ந்த விஜயகுமார்(வயது 23), விக்ணேஷ்(26), அஜித்(25) ஆகிய 3 பேரும் சேர்ந்துதான் இன்பென்ட்ராஜ், மணிராஜ் ஆகியோரை கடத்தினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் விஜயகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.