

திருச்சி:
புதுச்சேரி அனிதா நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளிடம் இருந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில், 2 சிறுமிகளும் திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து புதுச்சேரி போலீசார் திருச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் இருந்து இறங்கிய சிறுமிகளை மீட்டு திருச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி விரைந்து வந்த புதுச்சேரி போலீசார் மற்றும் சிறுமிகளின் பெற்றோர்களிடம் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக, பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமிகள் கூறியதாக தெரிகிறது.