

நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் வாகையடி குலாலர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). ரெயில்வேயில் ட்ராக் மேனாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வீட்டிலிருந்து மணி வேலைக்கு சென்றார். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து டவுன் ரெயில் நிலையம் நோக்கி அவர் பணியில் ஈடுபட்டார். ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி சென்ற ரெயில் மணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக இருந்தார்.
இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மணி இறந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினரும் அங்கு வந்தனர். மணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மணிக்கு மதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.