

திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிக்காளிபாளையம் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் நேற்று முன்தினம் ரத்தம் படிந்திருந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்ட போது, சூட்கேசுக்குள் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இளம்பெண் உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. ஆனால் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால் இதனால் அந்த பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று உடலை சூட்கேசுக்குள் திணித்து சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில பெண்ணாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூட்கேஸ் கிடந்த பகுதி சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 6-ந்தேதி இரவு பெருந் தொழுவு சாலை வழியாக தாராபுரம் சாலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர், கொலையான இளம்பெண் திணித்து வைக்கப்பட்டிருந்த நிறத்திலான சூட்கேஸ் பெட்டியை கால்வாய்க்குள் வீசி விட்டு, மீண்டும் அதே சாலையில் திரும்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனால் அந்த வாலிபர்களே இளம்பெண் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதையடுத்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து 2பேரை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என்பதால் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு போலீசார் சென்று பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.