கிருஷ்ணகிரியில் கைப்பற்றப்பட்ட உலோக சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையிலான போலீசார் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று கைப்பற்றப்பட்ட சாமி சிலைகளை பாதுகாப்பாக வைத்தனர்.
கைப்பற்றப்பட்ட உலோக சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
கைப்பற்றப்பட்ட உலோக சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
Published on

கும்பகோணம்:

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவரது வீட்டில் இருந்த பழமையான உலோக சாமி சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தனர். சிலைகளை பார்வையிட்ட நீதிபதி உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் வசிக்கும் சீர்காழி என்பவரது வீட்டில் பழமையான உலோக சாமி சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சியாமளா தேவி, ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரியில் உள்ள சீர்காழி என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் 11.12 கிலோ எடையுள்ள சுமார் 51 செ.மீட்டர் உயரம் கொண்ட விஷ்ணு உலோக சிலை மற்றும் 8.90 கிலோ எடையுள்ள 42 செ.மீட்டர் உயரம் கொண்ட லட்சுமி உலோக சிலை ஆகியவை இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிலைகளை கைப்பற்றிய போலீசார் சிலைகள் குறித்து சீர்காழியிடம் விசாரணை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட 2 சாமி சிலைகளும் தனது தகப்பனார் கோபாலகிருஷ்ணன் தனது அறையில் வைத்திருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் இறந்ததையடுத்து அவர் வைத்திருந்த சிலைகளை அவரது அறையிலேயே வைத்திருந்ததாகவும் இந்த சிலைகள் குறித்து தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ எந்தவித தகவலும் தெரியாது எனவும் சீர்காழி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சிலைகளை தங்களுடன் எடுத்து வந்த போலீசார் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஒப்படைத்தனர். போலீசார் கொடுத்துள்ள தகவலின்படி 2 உலோக சிலைகளின் எடை மற்றும் உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த நீதிபதி சண்முகப்பிரியா அந்த இரண்டு சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் செயல்பட்டு வரும் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையிலான போலீசார் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று கைப்பற்றப்பட்ட சாமி சிலைகளை பாதுகாப்பாக வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com