

கோவை:
கோவை வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் உள்ள கே.கே.நகரில் அதிகளவிலான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்க கூடிய வாலிபர் ஒருவர், தன் வீட்டு முன்பு சுற்றி திரியும் தெருநாயை பிடித்து, வீட்டில் உள்ள கட்டையை எடுத்து, சரமாரியாக தாக்கினார்.
இதில் நாய் வலி தாங்க முடியமால் அலறி அடித்து கொண்டு ஓட முயற்சிக்கிறது. ஆனால் விடாமல் அந்த நாயை துரத்தி சென்று பிடித்து தலையில் அடித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விட்டது.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் நாயை தரதரவென இழுத்து சென்று சாலையோரம் வீசி விட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நாயை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நாயை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் மினி என்பவர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணையில் நாயை தாக்கி அடித்து கொன்றது, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாலு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலு மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.