

திருப்பூர்:
நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இந்தநிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் பின்னலாடை தொழில்துறை சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் எம்.பி.க்கள் திருப்பூர் சுப்பராயன், கோவை நடராஜன், கரூர் ஜோதிமணி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம், ஈரோடு கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் மற்றும் தொழில்துறை சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பின்னலாடை சார்ந்த தொழில்கள் அதிக அளவு இருக்கக் கூடிய சூழ்நிலையில் உடனடியாக நூல் விலை பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு மூலமாகவும் இப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் ஏற்கனவே 16ந்தேதி முதல் 21ந்தேதி வரை 6 நாட்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அதனை மாநிலம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல இருப்பதால் 16 , 17ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும், திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களிலும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும், பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்தது போல நூல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.