இலங்கை தமிழக மீனவர்கள் போராட்டம் எதிரொலி- ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அத்துமீறி வரும் இந்திய மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவோம் என இலங்கை மீனவர்கள் எச்சரித்திருந்தனர்.
இலங்கையில் போராட்டம் நடத்திய மீனவர்கள்
இலங்கையில் போராட்டம் நடத்திய மீனவர்கள்
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் உள்பட தமிழக பகுதிகளில் இருந்து வரும் மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடிப்பதாகவும், மேலும் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதால் இலங்கை மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அங்குள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி வரும் இந்திய (ராமேஸ்வரம்) மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக இலங்கை (தமிழர்கள்) மீனவர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அத்துமீறி வரும் இந்திய மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவோம் என இலங்கை மீனவர்கள் எச்சரித்திருந்தனர்.

இலங்கை மீனவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து அந்த நாட்டு கடற்படையினர் இந்திய கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை கைது செய்யவும், படைகளை சிறைபிடிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பொருளாதார சூழ்நிலையை கருதி ராமேசுவரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் இன்று காலையில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையில் மட்டும் மீன் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆழ் கடலுக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட பெரிய படகுகள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு பயந்து இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com