விபத்தில் இறந்த அண்ணனுக்கு சிலை வடித்த சகோதரி- உறவினர்கள் நெகிழ்ச்சி

ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் இறந்த தனது அண்ணனுக்கு சிலை வடித்து சகோதரி விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாண்டித்துரையின் முழு உருவச்சிலை
பாண்டித்துரையின் முழு உருவச்சிலை
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபாநகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை (வயது 21). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லக்கையன்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். பாண்டித்துரையின் சகோதரி பிரியதர்சினிக்கு திருமணமாகி தாரிகா, மோனேஷ் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த குழந்தைகள் மீது பாண்டித்துரைக்கு மிகுந்த பாசம் இருந்து வந்தது. மேலும் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவது குறித்தும், தனது மடியில் அமர வைத்து காது குத்த வேண்டும் என பாண்டித்துரை தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

இந்த சூழலில் பாண்டித்துரை இறந்து விடவே அவரது ஆசையை நிறைவேற்ற சகோதரி பிரிய தர்ஷினி மற்றும் அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி பாண்டித்துரையின் சிலிக்கான் உருவச்சிலையை செய்ய முடிவு செய்தனர். ரூ.5 லட்சம் செலவில் இந்த சிலையை வடிவமைத்து விழா நடந்த மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.

பாண்டித்துரையின் சிலைக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிவித்து அவர் தத்ரூபமாக அமர்ந்திருப்பது போல குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் நடந்த காதணி விழாவில் பாண்டித்துரையின் சிலையை வைத்து அவரது மடியில் குழந்தைகளை அடுத்தடுத்து அமர வைத்து காது குத்தும் வைபவத்தை நடத்தி முடித்தனர். இது விழாவுக்கு வந்த உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பாண்டித்துரையின் சகோதரி பிரியதர்ஷினி தெரிவிக்கையில், காதணி விழாவில் குழந்தைகளுக்கு தாய் மாமன் அளிக்கும் சீர் வரிசையே உறவினர்கள் மத்தியில் பேச்சாக இருக்கும். அதன்படி எனது சகோதரர் என் குழந்தைகளுக்கு நிறைய சீர் செய்து காதணி விழாவை விமர்சையாக நடத்த எண்ணினார். ஆனால் அவர் விபத்தில் இறந்தது எங்கள் குடும்பத்துக்கும் எனது குழந்தைக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் சிலை வடிக்க முடிவு செய்தோம். அதன்படி பெங்களூரில் சிலை வடிக்கும் நிறுவனத்தாரிடம் ரூ.5 லட்சம் செலவில் சிலை வடித்து காதணி விழாவை நடத்தினோம். விழா முடிந்த பிறகும் அவரது சிலையை வீட்டிலேயே வைத்து உள்ளோம் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com