

சேலம்:
கொரோனா தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா ஒமிக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது.
டெல்டா பிரிவு கொரோனாவை விட ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த தொற்று தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநில எல்லைகளில் பரிசோதனை மையங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலத்திற்கு விமானத்தில் வருபவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமிக்ரான் தொற்றை கண்டறிய தனி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய கொரோனா தொற்றை தவிர வேறு ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால் அந்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி அது எந்த வகையான தொற்று என்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சை பெற வசதியாக தனி வார்டுயில் 12 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுக்க பழைய கட்டுப்பாடுகளான அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கூட்டமாக இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, கொரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் செலுத்தி கொள்ளுதல் உள்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால் இந்த புதிய வகை ஒமிக்ரான் தொற்று பரவுவதை எளிதாக தடுக்கலாம் என சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளிதேவி தெரிவித்துள்ளார்.