நுங்கம்பாக்கத்தில் காரில் ஆயுதங்கள் பறிமுதல்: தப்பி ஓடிய 6 ரவுடிகளை பிடிக்க வேட்டை

கே.கே.நகரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடத்த திட்டமிட்ட 6 ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் ஆயுதங்கள் பறிமுதல்
காரில் ஆயுதங்கள் பறிமுதல்
Published on

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

போலீசுக்கு பயந்து காரில் இருந்து இளைஞர்கள் சிலர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. ஆனால் கார் டிரைவர் செல்வமணி போலீசில் சிக்கினார்.

அவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடியவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் என்பது தெரியவந்தது.

காரில் போலீசார் நடத்திய சோதனையில் இரண்டு பெரிய அரிவாள்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட செல்வமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பி ஓடியவர்கள் யார்-யார் என்பது அடையாளம் தெரிந்தது.

நாங்குநேரியை சேர்ந்த கணேசன், உதயபாண்டி, பரமசிவம் உள்பட 6 ரவுடிகள் தப்பிச்சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

தப்பி ஓடியவர்களை தேடி கண்டுபிடிக்க திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் பகலவன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான தனிப்படையினர் 6 பேரையும் கைது செய்ய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையே நாங்குநேரி ரவுடி கும்பல் சென்னையில் தங்கி இருந்து கே.கே.நகரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடத்த திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com