அர்ச்சகரை சாதி பெயரை கூறி மிரட்டிய சமயபுரம் கோவில் காவலாளி கைது

உறவுக்கார பெண்ணுடன் பேசியதால் ஆத்திரமடைந்த சமயபுரம் கோவில் காவலாளி அர்ச்சகரை சாதி பெயரை கூறி மிரட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கைது
கைது
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காவலராக வேலை பார்ப்பவர் வரதன். இவர் அங்குள்ள கோவில் பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலான முக்தீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வரதன், தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் அர்ச்சகர் மகேஷ்குமார் பேசி வருவதைக்கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வரதன் அர்ச்சகர் மகேஷ் குமாரை ஜாதியை சொல்லி திட்டி இங்கு வேலை பார்க்கக்கூடாது என்று மிரட்டியதாக புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையரின் கவனத்திற்கு மகேஷ்குமார் கொண்டு சென்றதுடன், சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மனைவியுடன் சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த பிரச்சினை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே திருச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற வரதன், நீதிபதி வழங்கிய முன் ஜாமீனில் கூறியபடி நீதிமன்றத்தில் (ஜாமீன்தாரர்களுடன்) தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கோவில் காவலர் வரதனை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். வரதன் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com