சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.8 லட்சம் பறிப்பு

சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் மோசடி
பணம் மோசடி
Published on

போரூர்:

விருகம்பாக்கம் சாய்பாபா காலனி, 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளி (52). ஹோமியோபதி டாக்டரான இவர் பாண்டிச்சேரியில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நிலத்தரகர் செல்வகுமார் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இந்த நிலையில் அவர் தனது நண்பர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் மூலம் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய வள்ளி அவரிடம் நேரில் அழைத்து செல்லுமாறு செல்வகுமாரிடம் கூறினார்.

இதையடுத்து கடந்த 14-ந் தேதி வள்ளியை சாலி கிராமம் பகுதியில் உள்ள விடுதிக்கு செல்வகுமார் வரவழைத்தார். அப்போது அங்கிருந்த “டிப் டாப்” வாலிபரை இவர் தான் எனது நண்பர் ராம்பிரசாத் “சுங்கத்துறை கமி‌ஷனர்” என்று வள்ளிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது ராம்பிரசாத் என்னிடம் உள்ள 2 கிலோ நகையை ரூ.8 லட்சத்துக்கு தருகிறேன். அதை வாங்கி நீங்கள் கைமாற்றினால் பல லட்சங்கள் லாபம் கிடைக்கும் என்று வள்ளியிடம் கூறினார்.

உடனடியாக வள்ளி ரூ.7 லட்சத்தை ஆன்லைன் மூலமாகவும் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும் என மொத்தம் ரூ.8 லட்சம் பணத்தை ராம்பிரசாத்துக்கு கொடுத்தார்.

பின்னர் இரவு நகைகளுடன் வருவதாக கூறி சென்ற இருவரும் மாயமாகி விட்டனர். அவர்கள் செல்போனும் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

வடபழனி உதவி கமி‌ஷனர் பாலமுருகன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வள்ளி தங்கியிருந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு நில தரகர் செல்வகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.8 லட்சம் பணத்துடன் மாயமான “டிப் டாப்” வாலிபர் ராம்பிரசாத் சுங்கத்துறை அதிகாரி போல நடித்து டாக்டர் வள்ளியிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com