

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கடந்த 15-ந்தேதி ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான ‘எபிடிரைன்’ என்ற போதைப் பொருள் பிடிபட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, கியூ பிரிவு மற்றும் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பூங்கா அருகே சந்தேகப்படும் படியாக நின்ற அன்சர் அலி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சமையல் குக்கரில் 162 கிராம் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் டூவிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (26) மற்றும் இம்ரான் கான் (27) ஆகியோரையும் தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக இவர்களுடன் தருவைகுளம் பட்டினம் மருதூரை சேர்ந்த கசாலி (27), நவமணிநகரை சேர்ந்த பிரேம் (40), ரோஸ்நகரை சேர்ந்த அந்தோணிமுத்து (44) ஆகியோரும் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு சென்று தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தோணிமுத்து வீட்டில் சுமார் 21 கிலோ ‘ஹெராயின்’ என்ற போதை பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 21 கோடி ஆகும்.
உடனடியாக 3 பேரையும் தனிப்படையினர் கைது செய்து அங்கிருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ஹெராயின் பாக்கெட்டுகள் ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் 6 பேரிடமும் தனிப்படையினர் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- நாங்கள் அனைவரும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
சில மாதங்களுக்கு முன்பு லட்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இவை கடலில் சிறுசிறு பாக்கெட்டுகளாக மிதந்து வந்தது. அதனை எடுத்து பார்த்த போது அது ஹெராயின் என்பது தெரியவந்தது.
ஆனால் அதன் மதிப்பு தெரியாததால் அதனை அவ்வப்போது குறைந்த விலைக்கு விற்று வந்தோம். அப்படி விற்க வந்தபோது போது நேற்று போலீசார் 3 பேரை கைது செய்தனர். பின்னர் நாங்களும் சிக்கிக் கொண்டோம் என்றனர்.
இந்த வழக்கில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் போதை பொருட்களை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கிறார்களா? அல்லது விசைப்படகுகள் மூலமாக கடத்தி செல்கிறார்களா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் 6 பேரையும் போலீசார் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.