

சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஏசுபாதம். இவருடைய மகன் பிரதாப் (வயது 19). இவர், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு இவர், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். திருப்போரூர்-செங்கல்பட்டு சாலையில் சென்ற போது, சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், பிரதாப் அங்கிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது தாயார் செல்வி, ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், மனுதாரருக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.14 லட்சத்து 23 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.