

சென்னை:
சென்னை புரசைவாக்கத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதியவர்களின் முதலீட்டு தொகைக்கு 9 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதை நம்பி இந்த நிதி நிறுவனத்தில் ஏராளமான முதியவர்கள் பணத்தை முதலீடு செய்தனர். சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டினார்கள். சில நாட்கள் முதியவர்களுக்கு 9 சதவீதம் வட்டி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு முதியவர்களுக்கு வட்டி பணத்தை கொடுக்கவில்லை. எனவே அவர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். ஆனால் அந்த பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இந்த நிலையில் நிதி நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது. இதனால் இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டிய 1,500க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் சுமார் ரூ. 100 கோடி மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூத்த குடிமக்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.