

திருவொற்றியூர்:
மணலி புது நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ரவிச்சந்திரன் மீண்டும் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் மணலி புதுநகர் எம். ஆர். எப். குடியிருப்பு அருகே ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை மர்மகும்பல் கத்தியால் குத்தியும் தலையில் கல்லைத்தூக்கி போட்டும் கொடூரமாக கொலை செய்து இருந்தனர்.
இதுகுறித்து மணலி புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மணலி புதுநகரைச் சேர்ந்த ரவுடியான ஆறுவிரல் மதன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கொலையுண்ட ரவிச்சந்திரனின் பிணத்துடன் செல்பி எடுத்த படத்தை பகிர்ந்து இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மதனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் நண்பர்களான குத்தா, பரத், பப்லு ஆகியோருடன் சேர்ந்து ரவிச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மதன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதையில் இருந்த ரவுடி ஆறுவிரல் மதனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்க திட்டமிட்ட மதன், கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தலாம் என்று மணலி புதுநகர் எம். ஆர். எப். குடியிருப்பு பகுதிக்கு ரவிசந்திரனை அழைத்து சென்றுள்ளார்.
போதை தலைக்கு ஏறியதும் ரவிச்சந்திரனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தலையில் பாறாங்கல்லை போட்டு துடிதுடிக்க கொலை செய்து இருக்கிறார்கள். அதன்பின்னர் ரவிச்சந்திரனின் பிணத்துடன் செல்போனில் செல்பி எடுத்து அதனை மதன் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இதனை வைத்து போலீசார் மதன் உள்பட அவனது கூட்டாளிகளை கைது செய்தனர்.
ரவிச்சந்திரன் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.