

திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது எஸ்.கோபாலபுரம். இந்த கிராமத்தில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் சமயத்தில் கிராமத்திற்கு வரும் இவர்கள் அங்குள்ள முனியாண்டி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு ஓரிரு வாரங்கள் கிராமத்தில் தங்கி விட்டு வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே இருக்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோபாலபுரம் கிராமத்திற்கு வந்த கொள்ளையர்கள் அடுத்தடுத்துள்ள 7 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
7 வீடுகளிலும் நகை-பணம் எதுவும் இல்லை. இதனால் கொள்ளையடிக்க வந்த நபர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்று விட்டனர்.
நேற்று காலை கோபாலபுரம் முனியாண்டி கோவிலில் நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாச ராகவனுக்கு ஒரே நாளில் 7 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்தது.
அவர் இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
ஓட்டல் நடத்துபவர்கள் வீடுகளை குறி வைத்து நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சி சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.