

பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி ஊராட்சி சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வாழை, கீரை, மல்லிகைப்பூ செடி, நெற்பயிர், பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.
இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொன்னேரி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில், துணை வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம அலுவலர் இளங்கோ, ஊராட்சித் தலைவர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.60 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.