விருதுநகரில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது

சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர்.ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகரில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்-  டிரைவர் கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரைட் மேரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுதாரித்து கொண்ட போலீசார் தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை விரட்டி பிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்ட போது தலா 50 கிலோ கொண்ட 61 கிலோ மூட்டை ரேசன் அரிசிகள் கடத்தி செல்வது தெரிய வந்தது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு கடத்துவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் அவனியாபுரத்தை சேர்ந்த பூவலிங்கம் (வயது 32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய முனிச்சாலையை சேர்ந்த பாண்டித்துரை (29) என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com