மதுரை மத்திய சிறையில் மேலும் ஒரு சம்பவம்- டியூப் லைட்டை உடைத்து உடலில் கீறி கைதி தற்கொலை முயற்சி

மதுரை மத்திய சிறையில் டியூப் லைட்டை உடைத்து உடலில் கீறி கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முகமது உசேன்
முகமது உசேன்
Published on

மதுரை:

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஏராளமானோர் உள்ளனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகமாக போடப்பட்டுள்ளது. சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதிகள் திடீர் போராட்டமும் நடத்தினர். ஆனால் போலீசார் இதனை கட்டுப்படுத்தினர். இந்தநிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த கார்த்திக் என்ற காட்டு ராஜா, நேற்று கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

அவரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கைதியும் தற்கொலைக்கு முயன்று போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவரது பெயர் முகமது உசேன் (வயது 29).

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை சமயநல்லூர் மீனாட்சி நகரில் உள்ள பரவை மார்க்கெட் காய்கறி வியாபாரி சாமுவேல் வீட்டுக்குள் புகுந்து, 2 பெண்களை கட்டிப்போட்டு 135 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முகம்மது உசேனை போலீசார் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

பிளாக் 1-ல் அடைக்கப்பட்டு இருந்த முகமது உசேனுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. முகமது உசேன் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி அவரை 3-வது பிளாக்கில் அடைத்தனர்.

ஆனால் அவர் ஜெயில் அதிகாரிகளிடம், “என்னை மீண்டும் 1-வது பிளாக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறி வந்தார். இதனை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. எனவே விரக்தி அடைந்த முகமது உசேன் ஜெயில் வளாகத்தில் உள்ள டியூப்- லைட்டை எடுத்து உடைத்து கை, கால், கழுத்து, தலை உள்பட பல்வேறு இடங்களில் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிறை காவலர்கள் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல்சிகிச்சைக்காக முகமதுஉசேன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உரிய சிகிச்சைக்கு பிறகு முகமது உசேனை போலீசார் மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

அடுத்தடுத்து 2 கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரை ஜெயிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com