

கோவை:
கோவை ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் என்ற அந்தோணி (வயது 55). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அந்தோணிக்கு இந்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவர் கடந்த 5-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அந்தோணியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் சிறை கைதிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்தோணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜன் என்பவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த கைதி அந்தோணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.