

போரூர்:
போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). எலக்ட்ரீசியன். இவரது மகன் மகேஷ் (30). சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் சின்னராஜ்(28). சேலத்தை சேர்ந்த இவரும் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். ஐய்யப்ப பக்தர்களான அனைவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கர், மகேஷ், சின்ன ராஜ், மற்றும் அவர்களது மற்றொரு நண்பர் என 4 பேரும் காரில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். சாமி தரிசனம் முடிந்து இன்று அவர்கள் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை மகேஷ் ஓட்டினார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் தாம்பரம் அருகே உடன் வந்த நண்பரை இறக்கிவிட்டு டிரங்க் சாலை வழியாக போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கோபாலகிருஷ்ணா தியேட்டர் எதிரே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது.
இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சங்கர், சின்ன ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த மகேஷ் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மகேசும் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. அவர்களுடன் வந்த நண்பர் வரும் வழியிலேயே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.