

திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரிவுரையாளர் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தலா 2 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முழுவதும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 632 பேர் எழுத உள்ளனர். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் பார்வதீஸ் கலைக்கல்லூரி, எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேபோல் தேர்வர்களை தவிர மற்றவர்கள் தேர்வு கூடம் அமைந்துள்ள பகுதியில் வராமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கல்வி அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வை கண்காணிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனர் பொன்னையா நியமிக்கப்பட்டு உள்ளார்.