புதுவையில் கர்ப்பமானதாக நாடகமாடிய போலீஸ்காரர் மனைவியால் பரபரப்பு

புதுவையில் கர்ப்பமானதாக நாடகமாடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி
கர்ப்பிணி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மனைவி 21 வயது பெண். இவர் கர்ப்பமாகாமலேயே கர்ப்பமானதாக கூறி குடும்பத்தினரை நம்ப வைத்தார். இப்படியே நிறைமாதம் வரை வந்து விட்ட நிலையில் பரிசோதனைக்காக தனது மனைவியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு போலீஸ்காரர் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுக்கச் சென்றபோது திடீரென அந்த பெண் மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் முதலில் அந்த செல்போன் விழுப்புரம் சிக்னலை காட்டியது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் போலீஸ்காரரான தனது கணவருக்கு போன் செய்து பேசினார்.

அப்போது தன்னை யாரோ கோவைக்கு கடத்தி வந்து விட்டதாகவும், தனது வயிற்றில் இருந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் கோரிமேடு போலீசார் கோவைக்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி நாடகமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com