திருமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விடத்தகுளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன்-சித்ரா ஆகியோரின் மகன் வெங்கட்ராமன் (வயது17) இவர் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது 10,11,12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவர்களுக்கு கணித தேர்வு நடைபெற்றது.

இந்ததேர்வு கடினமாக இருந்ததால் வெங்கட்ராமன் கணிதத் தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் கணிதத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் வெங்கட்ராமன் தனது தாய் சித்ராவிடம், இன்று காலை தான் கணித பாடத்தேர்வு சரிவர எழுதவில்லை என்றும் அதனால் கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து தோல்வி அடைந்து விடுவேன் என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தாய் சித்ரா தேர்வு குறித்து நினைத்து கவலைப்பட வேண்டாம் அடுத்த தேர்வுக்கு படி எனக்கூறிவிட்டு தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் தாய் சித்ரா, மகன் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் போனை எடுக்காததால் அருகில் உள்ளவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மகன் வீட்டில் இருந்தால் தோட்டத்திற்கு வரச்சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற உறவினர்கள் பூட்டியிருந்த கதவை தட்டி உள்ளனர். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சித்ராவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் பதற்றத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கட்ராமன் தூக்குப்போட்ட நிலையில் கிடந்ததை கண்டு உடனடியாக அவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு மாணவணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய புகாரி்ன் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com