

சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராமர் (வயது 40). இவர் பெங்களூருவில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே காசநோயால் பாதிக்கப்பட்ட ராமர் கடந்த 21-ந்தேதி சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மருத்துவ வார்டில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள கழிவறைக்கு சென்ற ராமர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. கதவை தள்ளி விட்டு உள்ளே சென்று பார்த்த போது தனது வேஷ்டியை கிழித்து ஜன்னலில் தூக்குப்போட்ட நிலையில் ராமர் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறினர்.
பின்னர் சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.