

திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி காலை மார்க்கெட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடல்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனால் மர்மநபர்கள் அந்த வாலிபரின் கை, கால்களை கயிறால் கட்டிப்போட்டு கத்தியால் குத்திக்கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெயிண்டர் ஸ்ரீதர்(வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீதரை கொலை செய்தது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சி சென்று ரெயிலில் வைத்தே செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்தனர்.
செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீதர் கொலைக்கான காரணம் குறித்த விவரம் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி ஸ்ரீதரும், செந்தில்குமாரும் திருப்பூர் மார்க்கெட் வளாகத்தில் மது அருந்தும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ஸ்ரீதரின் கை-கால்களை கட்டிப் போட்டு அவரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளார். தொடர்ந்து செந்தில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.