பூதப்பாண்டி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை- விவசாயி கைது

முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பூதப்பாண்டி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை- விவசாயி கைது
Published on

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.

கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com