மதுரையில் மொபட்டில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது

மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.
Published on

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகர பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தினமும் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

நேற்று முன்தினம் மதுரை செல்லூர் மற்றும் மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரமேஷ், ஏட்டுகள் சின்னையா, கணேசன் மற்றும் போலீசார் மேல நாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களின் மொபட்டில் வெள்ளை நிற சாக்கு பைகள் வைத்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர்.

அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜோகராம் (வயது35), ஹரீஷ் (26) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் மதுரை லட்சுமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்று வந்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 400 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com