வருகிற 26-ந்தேதி திருமணம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை மரணம்

வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.
வருகிற 26-ந்தேதி திருமணம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை மரணம்
Published on

காஞ்சிபுரம்:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(வயது25).

இவர் திருவேற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இவருக்கும் திருவேற்காடு பகுதியைசேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மோகன் ராஜ்-இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமணத்தை வருகிற 26-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது அங்கு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்து கிடந்தார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த வழியாக வந்த போது முன்னால் சென்ற லாரியை திடீரென டிரைவர் நிறுத்தினார். இதில் பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் முதியவர் மற்றும் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com