

புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிகேசவன் (வயது19). இவரது நண்பர் ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21).
தசரா விழாவிற்கு வந்திருந்த மனோஜ்குமார், ஜோதிகேசவன் வீட்டில் தங்கியிருந்தார். நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் சென்று விட்டு பின்னர் இரவில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.
அவர்கள் வேப்பலோடை அருகில் வரும்போது தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு தருவைகுளம் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த ஜோதிகேசவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான புதூர்பாண்டியாபுரம் சேர்ந்த மதுரைவீரன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.