விருதுநகர் அருகே கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் அருகே கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற தாய்-மகன் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ
தீ
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இவரது தோட்டத்து அருகில் ஜோதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

ஜெயலட்சுமி தனது தோட்டத்துக்கு செல்ல ஜோதீஸ்வரிக்கு சொந்தமான இடம் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதீஸ்வரி தனது இடத்தில் மரக்கட்டைகளை போட்டு வழியை மறித்ததாக தெரிகிறது. இதனால் ஜெயலட்சுமி தனது தோட்டத்துக்கு செல்ல முடியவில்லை.

இதுகுறித்து அவர் கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணைக்கு இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

அதன்படி நேற்று ஜெயலட்சுமி, தனது மகன் ராஜாவுடன் (வயது 38) போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இதேபோல் ஜோதீஸ்வரியும் அங்கு வந்திருந்தார்.

இரு தரப்பினரிடமும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது ராஜா தனது தாய் ஜெயலட்சுமியுடன் போலீஸ் நிலைய வளாகத்துக்கு வந்தார். அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும், ஜெயலட்சுமி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கூமாபட்டி போலீசார் விரைந்து செயல்பட்டு தாய்-மகன் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com