மேலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் - 2 டிரைவர்கள் பலி

மேலூர் அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய லாரியை படத்தில் காணலாம்
விபத்தில் சிக்கிய லாரியை படத்தில் காணலாம்
Published on

மேலூர்:

தூத்துக்குடியில் இருந்து உப்புலோடு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி சென்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது லாரியின் டயர் பழுதாகி விட்டது.

இதனால் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் பழுதாகிய டயரை சரிசெய்தனர். அப்போது சிவகாசியில் இருந்து தீப்பெட்டி ஏற்றிக்கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது.

அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக உப்பு மூட்டை லோடுடன் பழுதாகி நின்ற லாரியின் மீது பின்புறமாக மோதியது. இதில் தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரியின் முன்பக்கம் நொறுங்கியது.

அந்த லாரியின் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் குமரகிரியை சேர்ந்த மந்திர மூர்த்தி(வயது50) சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல் பழுதாகி நின்ற லாரியை சரி செய்த உப்புலோடு லாரியின் டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த வரதராஜன் (50) என்பது தெரியவந்தது.

தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பலத்த காயம் அடைந்தார். இந்தவிபத்து குறித்து தகவலறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பலத்த காயமடைந்த சண்முகசுந்தரத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com