பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி

பணிமுடிய 2 ஆண்டுகளே உள்ள நிலையில் பயங்கரவாதிகள் சுட்டதில் கமலரங்கன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியது.
கமலரங்கன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போலீஸ் அதிகாரிகள்
கமலரங்கன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போலீஸ் அதிகாரிகள்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கமலரங்கன் (38). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயது மகனும், 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். கமலரங்கன் 2004-ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர் பணியில் சேர்ந்தார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள சி.கே. பாடி மலைபகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார்.

கடந்த 23-ந் தேதி இரவு இந்தப்பகுதியில் பயங்கரவாதிகள் சுட்டதில் கமலரங்கன் குண்டு காயமடைந்து வீரமரணம் அடைந்தார். அவருக்கு பணிமுடிய 2 ஆண்டுகளே உள்ள நிலையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்திற்கு உ ள்ளாக்கியது.

கமலரங்கனின் உடல் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து எல்லை பாதுகாப்பு படை வாகனத்தில் புறப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு சொந்த ஊரான பழையூருக்கு வந்தது.

அங்குள்ள மயானத்தில் கமலரங்கனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா, சாப்டூர்காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி உட்பட காவல்துறை அதிகாரிகளும், ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்களும், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மதுரை ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்த பின்னர் பழையூர் மயானத்தில் கமலரங்கனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் பழையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com