போலீஸ் நிலையத்தில் விடிய விடிய நடந்த காதல்ஜோடி- பெற்றோரின் பாசப்போராட்டம்

காதல் புதுமணத்தம்பதி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தகவலறிந்து பெண்ணின் பெற்றோர், அவரது உறவினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
காதல் ஜோடி சோபியா குமாரி- முரளி
காதல் ஜோடி சோபியா குமாரி- முரளி
Published on

திருப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நாதாராம். இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் சோபியா குமாரி( வயது 19). அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (28). செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.

முரளியும் , சோபியா குமாரியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதல் புதுமணத்தம்பதி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். இது குறித்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சோபியா குமாரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் பெண்ணை தங்களோடு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் காதலனை கரம் பிடித்த சோபியா குமாரி பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன் தன்னை பெற்றோருடன் அனுப்பினால் கொலை செய்து விடுவார்கள் என போலீசாரிடம் தெரிவித்து தனக்கும் தனது கணவர் முரளிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி பிடிவாதமாக இருந்தார்.

சோபியாகுமாரியிடம் அவரது பெற்றோர், முரளி பணத்துக்காக உன்னை திருமணம் செய்துள்ளான். அவனை நம்பி செல்லாதே, எங்களோடு வந்து விடு என்றனர். மேலும் முரளியிடம் எங்களது மகளை விட்டு பிரிந்துசென்று விடு என்றனர். ஆனால் சோபியாகுமாரி முரளியுடன்தான் வாழ்வேன் என்று கூறியதுடன், அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தார். முரளியும் நகை, பணம் எனக்கு தேவையில்லை. காதலித்து கரம்பிடித்த மனைவியை கண் கலங்காமல் காப்பாற்றுவேன் என்றார். இதையடுத்து காதல்ஜோடியை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் செய்வதறியாது தவித்த பெண்ணின் உறவினர்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை 1 மணி வரை காதல் ஜோடியை பிரித்து பெண்ணை தங்களோடு அனுப்பி வைக்கும்படி கேட்டு காவல் நிலையத்தை விட்டு செல்ல மறுத்து கூட்டமாக கூடியிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கலைந்து போகுமாறு தெரிவித்தும் யாரும் செல்லவில்லை. இதனால் பொறுமையிழந்த போலீசார் கூட்டத்தை கலைக்க அதிரடிப்படை போலீசாரை வரவழைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பெண்ணின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே காதல் திருமணம் செய்து கொண்ட சோபியா குமாரி பெற்றோரிடம் தன்னை ஒப்படைத்தால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள் என உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com