தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 5 வயது சிறுமி பலி

திருமலைக்குமார் தனது மகளை அழைத்துக்கொண்டு சுரண்டையில் இருந்து செங்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 5 வயது சிறுமி பலி
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் இலத்தூர் காந்தி காலனியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாணிக்கம் என்ற 5 வயது பெண் குழந்தை இருந்தது.

நேற்று மாலை திருமலைக்குமார் தனது மகளை அழைத்துக்கொண்டு சுரண்டையில் இருந்து செங்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுமி பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தார். சுரண்டையை கடந்து சிமெண்ட் குடோன் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அவர் கடக்க முயன்றார்.

அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால், முன்னால் சென்ற லாரியை வேகமாக கடந்து இடதுபுறம் திரும்பியபோது பின்னால் வந்த அந்த லாரி திருமலைக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயத்துடன் சிறுமி மாணிக்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். திருமலைக்குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுமி மாணிக்கத்தின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com