

தொப்பூர்:
தருமபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் பகுதி உள்ளது. இந்த பகுதி அதிக வளைவுகளை கொண்டதாகும். இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தொப்பூர் பகுதியில் இன்று காலை 6 கார்கள் மீது லாரி மோதியது. இதில் 5 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 8.30 மணியளவில் கார், தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் பார்சல் லாரி வந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனால் முன்னால் சென்ற திருச்சி நோக்கி சென்ற கார் மீது லாரி மோதியது.
இதில் கார் சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் சென்று விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த குடும்பத்தினர் லேசான காயம் அடைந்தனர்.
இதையடுத்து பார்சல் லாரி, தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த 5 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 5 கார்களும் சேதமானது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்டு தருமபுரி மற்றும் தொப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.