விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கால் ரூ.3000 கோடி காடாத்துணி உற்பத்தி பாதிப்பு

விசைத்தறியாளர்கள் போராட்டம் ஒரு புறம், மறுபுறம் நூல் விலை உயர்வு உள்ளிட்டவற்றர்ல ஜவுளித்தொழிலை தொடர முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை படத்தில் காணலாம்.
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2014-ல் உயர்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் வழங்கவில்லை. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. கூலி உயர்வை அமல்படுத்தினால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த 24.11.2021-ந்தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், மற்ற ரகத்திற்கு 20 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுநாள் வரை கூலி உயர்வை அமல்படுத்தாமல் உள்ளனர். இதனை கண்டித்தும் ஒப்பந்த கூலி உயர்வு வழங்கக்கோரியும் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டம், முதல்வருக்கு தபால் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் விசைத்தறியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம், மங்கலம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம், காரணம்பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விசைத்தறியாளர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று 30-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் ரூ.3000கோடி அளவுக்கு காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விசைத்தறியாளர்கள் போராட்டம் ஒரு புறம், மறுபுறம் நூல் விலை உயர்வு உள்ளிட்டவற்றர்ல ஜவுளித்தொழிலை தொடர முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

கடுமையாக நூல் விலை உயர்ந்திருப்பதால் ஜவுளி உற்பத்தி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு விதிமுறைகள், தொழில் மந்த நிலையால், பல்லடத்தில் சுமார் ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன.

இதற்கிடையே கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் போராடி வருகின்றனர். தற்போதுள்ள தொழில் நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க நாங்கள் தயாராகஉள்ளோம். ஆனால் விசைத்தறியாளர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். நூல் விலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே தொழிலை நடத்த முடியும் என்ற நிலையில் உள்ளோம். தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும், பஞ்சு, நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நூல் விலை உயர்ந்தும் துணி விலை உயரவில்லை. நூல் விலை ஒருபுறமும், விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு போராட்டம் மற்றொரு புறமும் எங்களை வாட்டி வதைத்து வருகின்றன. அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஜவுளி தொழில் காப்பாற்றப்படும். இல்லாவிட்டால் காடா ஜவுளி துணி ஆர்டர்கள் வட மாநிலங்களுக்கு செல்வதுடன், தமிழகத்தில் காடா ஜவுளி உற்பத்தி தொழில் கடும் பின்னடைவை சந்திக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com