

மதுரை:
சிவகங்கை மாவட்டம் உதயநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 87). இவர் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அவர் மதுரை மத்திய ஜெயிலில் கடந்த 2012-ம் ஆண்டு அடைக்கப்பட்டார். அதில் இருந்தே மதுரை மத்திய ஜெயிலில் இருந்து வந்த அவருக்கு உடல்நலம் பாதித்திருந்ததாகவும், அதற்கு அங்கேயே சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 4-ந்தேதி கிருஷ்ணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு சிறுநீரகம், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணன் இறந்தது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.