சசிகலா
சசிகலா

கொடநாட்டில் மாயமான ஆவணங்கள் எங்கே?: சசிகலாவிடம் இன்று 2-வது நாளாக விசாரணை

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் சசிகலாவிடம் 2 நாட்களாக போலீசார் நடத்தி இருக்கும் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை- கொள்ளை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா இருந்த வரையில் பலத்த பாதுகாப்புடன் இருந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரசியல் அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அடுத்தடுத்த விசாரணையால் இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்தபோது ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். எஸ்டேட்டில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனின் மனைவி, மகள் ஆகியோர் விபத்தில் மரணம் அடைந்தனர். சயன் விபத்தில் காயம் அடைந்தார்.

இப்படி கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு விசாரணை சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பான திருப்பங்களுடன் சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டி வைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை போலீசார் வாக்குமூலமாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கொடநாடு கொலை- கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னை வந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். 6 மணி நேரம் வரையில் அவரிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

இந்த விசாரணையின்போது கொடநாடு எஸ்டேட்டில் மாயமாகி இருப்பதாக கூறப்படும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பற்றியே போலீசார் சரமாரியாக கேள்வி எழுப்பினர். எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா முழுமையாக பதில் அளித்துள்ளார். முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருக்கிறார்.

சசிகலா அளித்த பதில்கள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ வடிவிலும் போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சசிகலாவிடம் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு இன்று காலை 10 மணி அளவில் சென்ற ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் 2-வது நாள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் அளித்த பதில்களில் இருந்தும் புதிது புதிதாக கேள்விகளை கேட்டு 2-வது நாள் விசாரணையை போலீசார் நடத்தினர். இன்றைய விசாரணையின் போதும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சசிகலா பொறுமையாக பதில் அளித்துள்ளார்.

2-வது நாள் விசாரணையின் போது சசிகலா அளித்த பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் சசிகலாவிடம் 2 நாட்களாக போலீசார் நடத்தி இருக்கும் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையின்போது சசிகலா அளித்துள்ள பல்வேறு தகவல்கள் கொடநாடு வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டுக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி கூலிப்படை கும்பல் புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே எழுந்த சந்தேகம் அப்படியே நீடித்து வருகிறது.

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் ரீதியாக சிலர் சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், அங்குள்ள சொத்து ஆவணங்களை குறி வைத்தே கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால் 5 ஆண்டுகளாகியும் இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சசிகலாவிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடிவில் இது போன்ற மர்மம் நிறைந்த பல கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்கும் என்று அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் நம்புகிறார்கள்.

கொடநாடு கொலை- கொள்ளை விவகாரத்தின் பின்னணியில் யார் இருந்தது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சசிகலாவிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் இனிவரும் நாட்களில் இதுவரை வெளியாகாத புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த வழக்கில் 5 ஆண்டுகளாக நீடிக்கும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com