பண்ருட்டி அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் கொள்ளை

சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சசிகுமார் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பண்ருட்டி அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் கொள்ளை
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் நெய்வேலியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் ஓரையூருக்கு வந்து போவது வழக்கம்.

இந்நிலையில் சசிகுமாரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சசிகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்தார்.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com