வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி-வேலைக்கார பெண்ணை கத்திமுனையில் மிரட்டி நகை- ரூ.1 லட்சம் கொள்ளை

மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி-வேலைக்கார பெண்ணை கத்திமுனையில் மிரட்டி நகை- ரூ.1 லட்சம் கொள்ளை
Published on

அண்ணாநகர்:

சென்னை, அண்ணாநகர், வி பிளாக், 4-வது அவென்யூவில் வசித்து வருபவர் சுசித்ரா(வயது76). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.

இதையடுத்து சுசித்ரா மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். அவருக்கு உதவியாக சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு வேலைகள் செய்து அவருடனேயே தங்கி உள்ளார்.

நேற்று இரவு சுசித்ராவும், மகாலட்சுமியும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் 2 வாலிபர்கள் கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டி சுசித்ரா, மற்றும் வேலைக்கார பெண் மகாலட்சுமியை கத்திமுனையில் மிரட்டினர். அலறினால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி அமர வைத்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் 2 பேரும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் மூதாட்டி சுசித்ரா, வேலைக்கார பெண் மகாலட்சுமி அணிந்து இருந்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து மூதாட்டி சுசித்ரா கொள்ளை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com