ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி வெற்றி- வாக்காளர்களுக்கு ஜவாஹிருல்லா நன்றி

எளிய மக்களின் பிரதிநிதிகளாகப் போட்டியிட்ட ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ள வாக்காளர்களுக்கு நன்றிகளை ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 104 இடங்களில் போட்டியிட்டது.

மாநகராட்சிகளில் 11 வார்டுகளிலும், நகராட்சிகளில் 41 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 52 வார்டுகளிலும் அந்த கட்சி போட்டியிட்டது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) 7 மாநகராட்சி வார்டுகள், 30 நகராட்சி வார்டுகள், 45 பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 82 இடங்களில் வெற்றி பெற்றது.

சென்னை, கோவை, திருச்சி, தாம்பரம், நெல்லை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 7 வார்டுகளில் அந்த கட்சி வெற்றிபெற்றது.

சென்னை மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி 2 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 55-வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தாஹா எல்.நவீன் 7,313 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 23-வது வார்டில் போட்டியிட்ட ஷேக் முகமது அலி தோல்வி அடைந்தார்.

தாம்பரம் மாநகராட்சியில் 50-வது வார்டில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.யாக்கூப் 3,736 வாக்குகள் பெற்றார்.

பூந்தமல்லி நகராட்சி 15-வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.மெஹ்ராஜ் வெற்றிபெற்றார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியளித்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

எளிய மக்களின் பிரதிநிதிகளாகப் போட்டியிட்ட ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ள வாக்காளர்களுக்கு எமது சிறப்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

சென்னை, கோவை, திருச்சி, தாம்பரம், திருநெல்வேலி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நகராட்சிகளில் 30 இடங்களிலும் பேரூராட்சிகளில் 45 இடங்களிலும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்கள் தொண்டு என்பதை ஓர் இறைவழிபாடாகவே பயிற்றுவிக்கும் பாசறையில் உருவான சகோதர, சகோதரிகள் உள்ளாட்சி மன்றங்களில் நுழைவது மக்கட்பணி மென்மேலும் சிறக்க வழிவகுக்கும்.

மகத்தான வெற்றிக்குப் பாடுபட்ட தி.மு.க. கூட்டணி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தன்னலமற்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும், ஊடக அன்பர்களுக்கும், நமது வெற்றிக்காகப் பிரார்த்தித்த நல்லுங்களுக்கும் இதயங் கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள நற்சான்றுப் பத்திரமே இந்த மகத்தான வெற்றி. இந்த நல்லாட்சியின் மாண்புகளை உள்ளாட்சிகளிலும் வெற்றி பெற்றவர்கள் மிளிரச் செய்வது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com