தமிழக அரசையும், மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது- ஜவாஹிருல்லா கண்டனம்

தமிழக மக்களின் சூழலியல் சார்ந்த வி‌ஷயத்தில் எந்தவித பரிசோதனை முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
Published on

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட அணு மின் அலகுகள் இரண்டு செயல்பட்டு வரும் நிலையில் மூன்று மற்றும் நான்காவது அலகுகள் அமைக்கும் பணி 2017-ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 5-வது, 6-வது அலகுகள் அமைக்கும் பணியும் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது.

1-வது 2-வது உலைகளில் இருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை உலைக்கு அருகிலேயே சேமிக்க அணுமின் கழகம் திட்டமிட்டிருந்த நிலையில் 2019-ம் ஆண்டு பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

தேசிய அணுமின் கழகம் மூன்றாவது நான்காவது உலைகளின் அருகிலேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகள் திணறி வருகின்ற நிலையில் ஆழ்நிலை கருவூலம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யக்கூட இன்னும் முடியாத நிலையில் அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் தொடர்ந்து சேமித்து வைக்க முயல்வது மிகப்பெரிய பேராபத்தை உண்டாக்கும்.

தமிழ்நாடு அரசு இந்த வி‌ஷயத்தில் உறுதியான நிலையை எடுத்த பின்னரும் அணுக்கழிவு மையம் அமைக்கும் வேலைகளைச் செய்வது என்பது தமிழ்நாடு அரசையும் தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டுவரும் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலுவான வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் சூழலியல் சார்ந்த இந்த வி‌ஷயத்தில் எந்தவித பரிசோதனை முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது. தமிழக மக்கள் பரிசோதனை எலிகள் அல்ல.

எனவே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு ஏனைய சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com