பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கொண்டு வருவது சமூக நீதியை சிதைக்கும் செயல்- ஜவாஹிருல்லா

உயர்கல்வி நிறுவனங்களில் பயில நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
Published on

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் கல்வி கனவை பாழாக்கும் செயலில் யு.ஜி.சி. துணையோடு மத்திய அரசு இறங்கியுள்ளது. இது மறைமுகமான நவீன குலக் கல்வித் திட்டத்தின் வெளிப்பாடு.

சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இச்செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படுவது இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

எந்த நுழைவுத் தேர்வும் இல்லாமல் தமிழ்நாட்டில் தரமான உயர்கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உலகத்தரத்தில் உள்ளது.

ஆனால் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்கள் பெரிய அளவில் உயர்கல்வியில் சேர்ந்து பயில்வதை சிதைத்து அவர்களை உயர்கல்வியைக் கற்க முடியாத நிலைக்குக் கொண்டுவரவே இந்த நுழைவுத் தேர்வு நடவடிக்கை.

எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் பயில நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com