எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

மாயனூர் ரெயில் நிலையம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
Published on

கரூர்:

மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையம் வந்தது. பின்னர் அங்கே பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொண்டு மீண்டும் கரூர் நோக்கி புறப்பட்டது.

இந்த ரெயில் இரவு 9.30 மணி அளவில் மாயனூர் ரெயில் நிலையம் பகுதிக்கு வந்தது. அப்போது ரெயில்வே பிளாட்பாரம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் பார்த்து விட்டனர்.

அவர்களின் அருகில் சென்று ரெயில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது, நகர்ந்து விடுங்கள் என்று தண்டவாளத்தில் நின்றவர்கள் பார்த்து பதட்டத்துடன் கூச்சல் எழுப்பினர். ஆனால் அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல் தண்டவாளத்தில் இருந்து நகராமல் நின்றனர்.

அதேபோல் ரெயில் என்ஜின் டிரைவரும் விளக்கு வெளிச்சத்தில் தண்டவாளத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவர்களை ரெயில் நெருங்கி விட்டதால் என்ஜின் டிரைவரால் எதுவும் செய்ய இயலவில்லை. நிற்காமல் சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து லோகோ டிரைவர் கரூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவனுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் சிதறுண்டு கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் தற்கொலை செய்தவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (40) என்பது தெரியவந்தது. இதில் பெருமாள் கடந்த இரண்டு வருடங்களாக மனைவியை பிரிந்து மாயனூர் பகுதியில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்துள்ளார்.

அதேபோன்று ஜோதியும் திருமணம் ஆகி கணவரை பிரிந்து பெருமாளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அணைக்கட்டில் பெருமாள் பிடிக்கும் மீன்களை கழுவி வாடிக்கையாளர்களுக்கு வெட்டி கொடுக்கும் வேலையை ஜோதி செய்து வந்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. மாயனூர் ரெயில் நிலையம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com