

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை.
இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து உள்ளது. அவர்கள் அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சசிகலா தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அளித்துஇருந்தது.
அதைஏற்று ஓ.பன்னீர்செல்வம், இளவரசி இன்று ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்துக்கு வந்தார்கள். அங்கு அவர்கள் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜரானார்கள்.
ஓ.பன்னீர் செல்வத்திடமும், இளவரசியிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் பதில் அளித்தனர். அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
அடுத்தக்கட்டமாக ஓ.பன்னீர் செல்வத்திடமும், இளவரசியிடமும் குறுக்கு விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வாக்குமூலம் அளிப்பதால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது